கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு கூட்டம் 21.12.2023 அன்று சென்னை தி.நகரில் நடைபெற உள்ளது.
அஞ்சல் துறை சார்பில் 21.12.2023 அன்று காலை 11.00 மணிக்கு கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு கூட்டம் சென்னை தி.நகரில் நடைபெறவுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் புகார்களை 20.12.2023 அன்றுக்குள் கீழே உள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பலாம். புகார் அஞ்சல் சேவை தொடர்பானதாக இருந்தால், தபால் அனுப்பப்பட்டதன் தேதி, அனுப்புநர் மற்றும் பெறுநரின் முழு முகவரி, பதிவு ரசீது எண் போன்ற முழு விவரங்களும் தெரிவிக்கப்பட வேண்டும்.
சேமிப்பு திட்டங்கள், அஞ்சல் ஆயுள் காப்பீடு அல்லது கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு பற்றிய புகாராக இருந்தால், கணக்கு எண், காப்பீட்டு எண், வைப்பாளர்- காப்பீட்டாளரின் பெயர், முழு முகவரி, தபால் அலுவலகத்தின் பெயர் உள்ளிட்டவை இடம்பெற வேண்டும். ஏற்கனவே கீழ்மட்டத்தில் உள்ள அஞ்சலகங்களுக்கு புகார்கள் எடுத்துச் செல்லப்பட்டு, தீர்வு காணப்படாத புகார்கள் மட்டுமே கோட்ட அளவிலான குறைதீர்ப்புக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
புகார்களை சாதாரண அல்லது பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும். தனியார் கூரியர் நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படும் புகார்கள் ஏற்கப்படாது. புகார்கள் அனுப்பப்படும் உறையில் ‘கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு – சென்னை மாநகர தெற்கு கோட்டம்’ (டிவிஷன் டாக் அதாலத்) என்று குறிப்பிடப்பட வேண்டும்.