அரையாண்டுத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக நெல்லை மாவட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18ஆம் தேதிகளில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. நெல்லை மாநகரின் பல்வேறு பகுதிகளையும் மழைநீா் சூழ்ந்தது. மாநகராட்சியினரும், மீட்புக்குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தற்போது போக்குவரத்து மெல்லமெல்ல சீராகி வருகின்றன. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜனவரி 2ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன், நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளில் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பல பள்ளிகள் சேதமடைந்துள்ளதுடன் நிவாரண முகாம்கள் செயல்படுவதால் மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ‘அரையாண்டு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.