தென்மேற்கு வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் புதுவை – ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும், அவ்வப்போது 85 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வட தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திராவில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு இன்று மற்றும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைகழக தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு தேதியில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடத்தப்படும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. அதேபோல் திருவள்ளுவர் பல்கலைகழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம், சென்னை பல்கலைகழகம், உள்ளிட்ட பல்கலைகழங்களில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.
மேலும் இன்று நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு டிசம்பர் 16-ம் தேதி நடைபெறும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதேபோல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பருவத்தேர்வுகழும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.