மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் என்ற கிராமம் உள்ளது. இங்கு திருவள்ளுவர் நகரை சேர்ந்த 51 வயதாகும் சர்க்கரை என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு அன்னலட்சுமி (48) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மேலும் இவர், அமமுகவில் திருப்பரங்குன்றம் 1-வது பகுதி செயலாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் சண்டை வெடித்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மனைவி அன்னலட்சுமி, இரவில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றியிருக்கிறார். இதனால், வலி தாங்க முடியாமல் கணவர் சர்க்கரை அலடி துடித்துள்ளார்.
மேலும், அங்கிருந்து கணவர் தப்பிவிடக் கூடாது என்பதற்காக பெரிய கல் ஒன்றை எடுத்து அவர் மீது போட்டுள்ளார் கொடூர மனைவி. இதில் நிலைகுலைந்து கிடந்த அவரை, அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளார் அன்னலட்சுமி. சுமார் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சர்க்கரை, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து அன்னலட்சுமி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். பிறகு இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், சர்க்கரையின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அமமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய அன்னலட்சுமியை தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவையும் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ”அமமுக பிரமுகர் சர்க்கரைக்கும், வேறொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறுகிறார்கள். கள்ளக்காதலை கைவிடும்படி அன்னலட்சுமி வற்புறுத்தி வந்ததால், இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதில், கணவரை அவர் கொடூரமாக கொன்று இருக்கலாம் என்று தெரிகிறது. கணவரை அவர் அரிவாளால் வெட்டும் காட்சியும், தப்பி ஓடும் காட்சியும் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. தப்பி ஓடிய அன்னலட்சுமியை கைது செய்த பின்புதான் கொலைக்கான முழு பின்னணி தெரியவரும்” என போலீசார் தெரிவித்தனர்.