கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் இயக்கம் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டதாகவும், அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மே 18-19ஆம் தேதிகளில் கொல்லப்பட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்தது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள், பல தருணங்களில் அவர் மரணமடையவில்லை என்று கூறி வந்தனர். இந்நிலையில் தான், வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி மரணம் அடைந்ததாக விடுதலைப் புலிகள் மாவீரர் பணிமனை என்ற பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். கடந்த 1972இல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை முதலில் பிரபாகரன் தொடங்கினார். 1975இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் பிரபாகரன் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக இவர் குற்றம் சாட்டப்பட்டார். இதையடுத்து, மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பின் பெயரை தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றினார்.
இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளால் இவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் இவருக்கு தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கருதியதால் இவரை இந்தியாவுக்கு நாடு கடத்த முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் அவர் மரணமடையவில்லை என்று கூறி வந்தனர்.
இந்நிலையில் தான், 16 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபாகரன் மரணம் குறித்து முக்கிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை என்ற பெயரில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், “உலகெங்கும் பரந்து வாழும் எம் உயிரினும் மேலான தமிழ் மக்களே..!! எமது விடுதனை இயக்கத்தின் தலைவரும் தமிழினத்தின் பெருந்தலைவருமான பிரபாகரன்,நந்திக் கடலோரம் நடைபெற்ற இறுதிச் சமரில் வீரகாவியமானார்.
தமிழினத்தின் தேசிய அடையாளத்தை நிலை நிறுத்தி முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரையும் உறுதி குலையாது படை நடத்தி, தான் வரித்துக் கொண்ட உயரிய லட்சியத்தையும், வழிநடத்தலையும் ஏற்று இறுதிக் கணம் வரை துணிவோடு களமாடி பிரபாகரன், 2009 மே மாதம் 18ஆம் தேதி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். பிரபாகரனை ஒப்பற்ற தேசியத் தலைமையாக தமது நெஞ்சங்களில் சுமந்திருக்கும் தமிழ் மக்களுக்கும், பெருந்துயரத்தோடு வெளிப்படுத்திக் கொள்ளும் அதேவேளை எமது வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வரலாற்றில் கிடைத்த பொக்கிஷமான பிரபாகரனுக்கு அனைவரும் ஒன்றிணைந்து அவரது வீரவணக்க நிகழ்வை தாயகம், தமிழகம் உட்பட தமிழ் மக்கள் வாழும் உலகப்பரப்பு எங்கும் நடத்துகிற அதேவேளையில், அனைவரும் ஒன்றிணையக் கூடிய ஐரோப்பிய நாடு ஒன்றில் 2025 நடுப்பகுதியில், உலகம் போற்றும் பேரெழுச்சியாக முன்னெடுக்க உள்ளோம். பிரபாகரனால் கட்டமைத்து வளர்க்கப்பட்டு நமது கைகளில் தரப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் போராட்டத்தை, அதே உறுதிப்பாட்டுடனும் கட்டுக் கோப்புடனும் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப தடம் மாறாது முன்னெடுத்துச் சென்று இறுதி இலட்சியத்தை அடைவோம் என பிரபாகரன் மீதும், மாவீரர்கள் மீதும் உறுதி எடுத்துக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.