இந்திய செஸ் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்தை விட அதிக புள்ளிகள் பெற்று இளம் வீரர் பிரக்ஞானந்தா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நெதர்லாந்து நாட்டில் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், நேற்றிரவு நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை எதிர்கொண்டார். இப்போட்டியில் 62 நகர்தல்களுக்கு பிறகு டிங் லிரனை பிரக்ஞானந்தா வீழ்த்தி இருந்தார். இந்த போட்டியில் வென்றுள்ளதன் மூலம் இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதல்முறையாக முதல் இடத்தை பிடித்து பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார்.
இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளியுள்ளார். இந்தியாவின் செஸ் விளையாட்டின் முகமாக நீண்ட ஆண்டுகளாக விஸ்வநாதன் ஆனந்த் இருந்து வருகிறார். 2000, 2007, 2008, 2010 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை விஸ்வநாதன் வென்றுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஸ்வநாதன் ஆனந்த், செஸ் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். கடந்தாண்டு நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் போது இந்திய இளம் வீரர் குகேஷ், விஸ்வநாதன் ஆனந்தை விட அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்தபோதும், சில நாட்களில் அடுத்தடுத்த தோல்விகளால் அவர் அதனை தக்க வைக்க முடியவில்லை. இதனால் விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் முதலிடத்திற்கு திரும்பி இருந்தார். இந்நிலையில், தற்போது பிரக்ஞானந்தா முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.