மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி 9 அமர்வுகளாக பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், 2வது பகுதி மார்ச் 10 முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 8வது முறையாக தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்வதன் மூலம் தொடர்ச்சியாக அதிக பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த அமைச்சர் என்ற சாதனையை பெறுகிறார்..நிர்மலா சீதாராமன்.ஆம், மறைந்த முன்னாள் பிரதமர் நேரு மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆட்சி காலங்களில் நிதியமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் 6 பட்ஜெட்டுகளை தொடர்ச்சியாக தாக்கல் செய்துள்ளார். இவர் ஒட்டுமொத்தமாக 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 2019ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐந்து முழு பட்ஜெட்டுகளையும், கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒரு இடைக்கால பட்ஜெட்டையும், 2024 – 2025 முழு பட்ஜெட்டும் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், 2025- 2026ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம் புதிய சாதனையை படைக்க இருக்கிறார். நாடாளுமன்ற அலுவல்களை ஒளிபரப்பும் சன்சத் தொலைக்காட்சியில் பட்ஜெட் தாக்கல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதிகளவு நிதி ஒதுக்கப்படுமா? என்று தமிழக மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். நிதிநிலை அறிக்கை காரணமாக இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமான ஏஐ தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் தொழில்நுட்ப வசதிக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் மக்களின் நுகர்வு போக்கை அதிகரிப்பது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, வேலைவாய்ப்பை ஊக்குவிக்குவது உள்ளிட்டவற்றில் அரசு கவனம் செலுத்தும் என சொல்லப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் புதிய வரி கணக்கு தாக்கல் நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.