சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெறாதது தொடர்பாக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜகவினர், விளம்பரங்களில் மோடி படத்தை ஒட்டினர்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான தொடக்க விழா, சென்னை நேரு மைதானத்தில் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். இந்த செஸ் போட்டியில் சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த 2,000 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில், தமிழக அரசின் விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் புறக்கணிக்கப்படுவதாக பாஜக தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. எனினும், இது தொடர்பாக அமைச்சர் மெய்யநாதன், பிரதமர் மோடியின் படம் எங்கும் புறக்கணிக்கவில்லை, போட்டியை தொடங்கி வைப்பதே பிரதமர் தான் என்று கூறியிருந்தார். இந்நிலையில், செஸ் ஒலிம்பிக் போட்டியை விளம்பரப்படுத்திடும் வகையில் தமிழக அரசு செய்த விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத் தலைமையில் பாஜகவினர் ஒட்டினர்.
இந்திய பிரதமரின் புகைப்படத்தைக் கூட போடாத நிலையை மாற்றிடவும், மக்கள் விரோத திமுக அரசுக்கும், திமுக அரசு செய்யும் தவறான செயல்களுக்கு துணை நிற்கும் அதிகாரிகளுக்கும் தவறை உணர்த்தி திருத்திடும் விதமாக பிரதமரின் புகைப்படத்தை ஒட்டியதாக அவர்கள் கூறினர். இது தொடர்பாக அமர் பிரசாத் கூறுகையில், இது திமுக நிகழ்ச்சி அல்ல. சர்வதேச செஸ் ஒலிம்பிக் போட்டி. பிரதமர் புகைப்படத்தை போடாதது மிகப் பெரிய குற்றம் என தெரிவித்தார்.