இந்தியா, இலங்கை, தாய்லாந்து, வங்காளதேசம், மியான்மர், நேபாளம், பூடான் ஆகிய 7 நாடுகள் இணைந்து கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளன. இதற்கு ’பிம்ஸ்டெக்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் 6-வது உச்சி மாநாடு தாய்லாந்தில் நடைபெற்ற நிலையில், இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பின்னர், இந்த மாநாடு முடிந்ததும் பிரதமர் மோடி இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றார்.
இலங்கை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை 6 அமைச்சர்கள் வரவேற்றனர். மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி, 6ஆம் தேதி தனது பயணத்தை நிறைவு செய்கிறார். இந்த பயணத்தின்போது இலங்கை அதிபர் அனுரா குமார தசநாயக, பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமரசூரியா ஆகியோரை பிரதமர் மோடி சந்திக்கிறார். 2015ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் 4-வது பயணம் இதுவாகும்.
இந்நிலையில், தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 2018 முதல் 2020 வரை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம், நாகை மீனவர்களின் 74 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது அவற்றை கடலில் மூழ்கடிக்க இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது தமிழக மீனவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எனவே, இதனை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.