ரூ.545 கோடியில் அமைக்கப்பட்ட பாம்பன் புதிய ரயில் பாலத்தை இன்று பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் நூற்றாண்டு கடந்த பழைய பாலத்திற்கு அருகே ரூ.545 கோடி மதிப்பிலான புதிய ரயில் பால கட்டுமான பணிகளை, கடந்த 2019, மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைத்தார். தொடர்ந்து 6 ஆண்டுகள் நடைபெற்ற பணிகள் கடந்தாண்டு 2024 இறுதியில் நிறைவடைந்தது. இந்த புதிய ரயில் பாலம் 2,078 மீட்டர் நீளமும், கடல் மட்டத்திலிருந்து 15.5 மீட்டர் உயரமும் கொண்டது. பழைய பாலத்தை காட்டிலும் 3 மீட்டர் உயரமானது. பாம்பன் புதிய ரயில் பாலத்தை இன்று பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
இலங்கை பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, இன்று பிரதமர் மோடி தமிழகம் வந்தார். ராம நவமி நாளான இன்று, மதியம் 1 மணியளவில், ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் அவர், சாலை பாலத்திலிருந்து ஒரு ரயிலையும், கப்பலையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பாலத்தில் நடைபெறும் போக்குவரத்து செயல்பாட்டையும் அவர் பார்வையிட்டார். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்துகிறார். இதனையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.