fbpx

பிரதமர் மோடியின் சென்னை வருகை.. 5 அடுக்கு பாதுகாப்பு.. ட்ரோன்கள் பறக்க தடை..

பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி, 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னைப் பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ பிரதமர் நரேந்திர மோடி வரும் 8-ம் தேதி, சென்னை, விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை திறந்து வைக்கவும், சென்னை, எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைக்கவும் சென்னை வருகிறார்.. மேலும், மெரினா அருகில், விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர், பல்லாவரம், அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளார்..

பிரதமரின் சென்னை வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள், காவல் இணை ஆணையாளர்கள், காவல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவு காவல் அதிகாரிகள், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை உள்பட 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் நிகழ்ச்சிகள் நடைபெறும் சென்னை, விமான நிலையம், சென்னை, எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், மெரினா விவேகானந்தர் இல்லம், கிண்டி ஆளுநர் மாளிகை மற்றும் அடையாறு கடற்படை தளம் ஆகிய இடங்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும், சென்னையில் செல்லும் வழித்தடங்களிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது…

மேலும், சென்னையில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளிலும் காவல்துறையினர் சோதனைகள் மேற்கொண்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என கண்காணித்து வருகின்றனர். இது தவிர, சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் காவல்துறையினர் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பிரதமர் வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், 08.04.2023 அன்று சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் (Drones) மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Unmanned Aerial Vehicles) பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maha

Next Post

காலியாக இருந்த கோழி குழம்பு சட்டி! ஆத்திரத்தில் கட்டையால் அடித்து மகன் படுகொலை! தந்தை கைது!

Thu Apr 6 , 2023
கர்நாடக மாநிலத்தில் கோழிக்கறியை சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராறில் தந்தை மகனை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக அந்த சிறுவனின் தந்தை சுப்பிரமணியம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் கல்வியா தாலுகாவை சார்ந்த சுப்ரமணியம் என்பவருக்கு சிவராமன் என்ற மகன் இருந்துள்ளார். சம்பவம் நடந்த தினத்தன்று அவர்களது வீட்டில் கோழிக்கறி சமைக்கப்பட்டுள்ளது. […]

You May Like