சென்னை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்கச் சென்னை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை, சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, திமுக பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர மேயா் பிரியா ராஜன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், உள்ளிட்டோர் வரவேற்றனர்.

5.25 மணி வரை விமான நிலைய அறையில் ஓய்வு எடுத்த பிரதமர் மோடி, விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையாறு சென்றார். ஐ.என்.எஸ் தளத்திலிருந்து சாலை வழியாகச் செல்லும் பிரதமர் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்குச் செல்லவிருக்கிறார். இதனால், மத்திய கைலாஷ், நந்தனம், தேனாம்பேட்டை மெட்ரோ, அண்ணா அறிவாலயம் எதிரில், அரசு கவின் கலைக் கல்லூரி உள்ளிட்ட 8 இடங்களில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமரை வரவேற்க பல்வேறு மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் பாஜகவினர் வருவதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜகவின் மாநில கலை மற்றும் கலாச்சார பிரிவினர் இந்த பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். ஆடி மாதம் என்பதால் அதனை மையமாகக் கொண்டு தமிழ்நாடு சிறு தெய்வங்கள் சிலை கொண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. 400-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் நடனமாட நாதஸ்வரம் இசைக்கப்பட உள்ளது. பிரதமரை வரவேற்கக் கோயில்களில் சாமி புறப்பாட்டிற்கு முன்பாக ஆடும் மல்லாரி நடனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அய்யனார், மதுரைவீரன், அம்மன், சிவன் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.