fbpx

செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரத்தில் பிரதமர் படம் இடம் பெற வேண்டும்.. உயர்நீதிமன்றம் உத்தரவு..

செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரத்தில் குடியரசு தலைவர், பிரதமரின் படங்கள் இடம் பெற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ”சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரத்திற்காக பெருமளவில் பொதுமக்களின் வரிப்பணத்தை தமிழ்நாடு அரசு செலவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற, நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய இந்த நிகழ்வினை ஆளும் கட்சி தங்களுக்கான அரசியல் ஆதாயம் தேடும் நிகழ்வாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படம் எங்கே..? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி..!

இந்நிகழ்விற்கான விளம்பரங்களில், இந்திய குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்களை தவிர்த்து முதலமைச்சரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறச் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள ராஜேஷ் குமார், இது சட்டவிரோதமானது எனத் தெரிவித்துள்ளார். ஆகவே, 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் பெயர் மற்றும் புகைப்படத்தை சேர்க்க உத்தரவிட வேண்டும்” என ராஜேஷ்குமார் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பிரதமர், குடியரசுத் தலைவர் புகைப்படத்தை இத்தகைய நிகழ்வில் இடம்பெறச் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது ஏற்கத்தக்கதல்ல. அதற்கு தமிழக அரசுத்தரப்பில் மன்னிப்பு கோர வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தமிழக அரசுத் தரப்பில், கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பிரதமர் வருகை 22ஆம் தேதிதான் உறுதி செய்யப்பட்டு மத்திய அமைச்சகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டது என்றும் அதனைத் தொடர்ந்து பிரதமரின் படம் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் சேர்க்கப்பட்டு, இன்றைய நாளிதழ்களில் கூட பிரதமரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது ‘குடியரசுத் தலைவரும், பிரதமரும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவர்களின் புகைப்படம் இடம்பெற்றிருக்கலாமே? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 100-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் சூழலில் நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும்’ என கூறினர்.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரத்தில் குடியரசு தலைவர், பிரதமரின் படங்கள் இடம் பெற வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.. மேலும் “.பிரதமர் படம் இடம்பெறாதது குறித்து தமிழக அரசின் விளக்கங்கள் ஏற்கத்தக்கவை அல்ல.. செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரத்தில் குடியரசு தலைவர், பிரதமரின் படங்கள் இடம் பெற வேண்டும்.. ஜனாதிபதி படங்கள் இடம்பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.. சர்வதேச அளவில் நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி அழியாத முத்திரையை பெற்றுத்தர வேண்டும்..” என்று தெரிவித்தனர்.. மேலும் ஜனாதிபதி, பிரதமர் பட விளம்பரம் சேதப்படுத்தப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆணையிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்..

Maha

Next Post

அப்படி போடு... பள்ளி மாணவர்களுக்கு இனி இது அனைத்தும் கட்டாயம்...! அரசின் தலைமைச் செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு...!

Fri Jul 29 , 2022
பள்ளி ஆலோசகர் குழந்தையின் படிப்பிற்குத் தேவையான முறையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர்களுக்கு தலைமைச் செயலாளர், அனுப்பிய கடிதத்தில்; ஒரு குழந்தை சரியாக படிக்கவில்லையென்றால், முதலில் சரியான கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். கற்றலில் குறைபாடிருக்கும் குழந்தை என அடையாளம் காணப்பட்டால், தலைமையாசிரியர் குழந்தையை District Early intervention […]

You May Like