மும்பையில் இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா தனது நண்பர்களுடன் பார்லே ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, போஜ்பூரி நடிகை சப்னா கில்லும் அவரது நண்பர்களும் பிருத்வி ஷாவிடம் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அவருடன் 2 புகைப்படங்களுக்கு மேல் எடுக்கக் கூடாது என்று சொல்லியும், மீண்டும் மீண்டும் அவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டே இருந்துள்ளனர். ஒருகட்டத்தில் அவர்களுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின் கைகலப்பாகியுள்ளது. இதனால், பிருத்வி ஷாவின் நண்பரது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிருத்வி ஷா அளித்த புகாரின் பேரில் சப்னா கில் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 17ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட அவர்களுக்கு ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து அவர்கள் வெளியில் வந்தனர்.
இந்நிலையில், வெளியில் வந்த சப்னா கில், பிருத்வி ஷா மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மும்பை விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள அவர், தனது நண்பர் ஷோபிட் தாக்கூர் தீவிர கிரிக்கெட் ரசிகர். ஆதலால், அவர் பிருத்வி ஷாவிடம் செல்ஃபி கேட்டுள்ளார். ஆனால், அதற்கு மது போதையிலிருந்த பிருத்வி ஷா மற்றும் அவரது நண்பர்கள் தாக்கூரை கடுமையாக தாக்கினர். இதனை தடுக்க சென்ற என்னையும் தகாத வார்த்தைகளில் திட்டியதோடு, தன்னிடம் தவறாக நடந்து கொண்டுள்ளனர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கிட்டத்தட்ட 10 பிரிவுகளின் கீழ் பல புகார்களை அளித்துள்ள நிலையில், பிருத்வி ஷா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. சப்னா கில் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டதில் இருந்து இருவரும் ஒருவர் மீது ஒருவராக பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதுவரை பிருத்வி ஷா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.