காங்கிரஸ் பொதுச்செயலாளா் பிரியங்கா காந்தி, மக்களவை தேர்தலில் பிரியங்கா காந்தி நிச்சயம் இடம்பெற வேண்டும் என்று அவரது கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களவை தேர்தலில் பிரியங்கா காந்தி நிச்சயம் இடம்பெற வேண்டும். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பிரியங்கா மிகச் சிறப்பாக செயல்படுவார். காங்கிரஸ் அவருக்காக சிறப்பாக திட்டமிடுமென நம்புகிறேன்” என்று கூறினார்.
பின்னர், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில், தொழிலதிபர் கெளதம் அதானியுடன் ராபர்ட் வதேரா இருக்கும் படத்தை காண்பித்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இதுதொடர்பாக பேசிய அவர், ”நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன். எனது பெயரை கெடுக்கும்படி நடந்து கொண்டால், நிச்சயம் குரலெழுப்புவேன்.
விமானத்தில் அதானியுடன் பிரதமர் மோடி இருக்கும் புகைப்படம் என்னிடமுள்ளது. அதுகுறித்து நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் பதில் வரவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தங்களது உரிமைக்காக போராடியபோது, ஸ்மிருதி இரானி அவர்களை சந்திக்கவோ குறைகளை கேட்டறியவோ இல்லை. மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினராககூட இல்லாத என்னை பற்றி கருத்து தெரிவிக்க என்ன அவசியம் உள்ளது? பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, நான் குறிவைக்கப்பட்டு வருகிறேன். ஆனால், எனக்கு எதிராக எதையும் அவர்களால் நிரூபிக்க முடியவில்லை” என்றார்.