Pro Kabaddi League 2024: 11-வது புரோ கபடி 57வது லீக் ஆட்டத்தில் 46-31 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றிபெற்றது.
11-வது புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். லீக்கில் ‘டாப்-2’ இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தன. இதனையடுத்து தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இந்த தொடரில் நேற்று (நவ.16) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் – தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 46-31 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக விஷால் சாஹல் 12 புள்ளிகள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 10 போட்டிகளில் 4 வெற்றி 5 தோல்வியுடன் 27 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. தோல்வியை சந்தித்த பெங்கால் வாரியர்ஸ் அணி 23 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளது. புரோ கபடி லீக் வரலாற்றில் பெங்கால் வாரியர்ஸ் தமிழ் தலைவாஸை 14 முறை எதிர்கொண்டுள்ளார். இதில், பெங்கால் வாரியர்ஸ் அணி 10 முறையும், தமிழ் தலைவாஸ் அணி 3 முறை வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்தது. பெங்கால் வாரியர்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் இடையே நடந்த முந்தைய போட்டியில் 74-37 என்கிற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், 58வது லீக் ஆட்டத்தில், தபாங் டெல்லி – பெங்களுரு புல்ஸ் அணிகள் மோதின . பரபரப்பான இந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய தபாங் டெல்லி அணி, 35-25 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களுரு புல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
Readmore: டெல்லி காற்றுமாசு எதிரொலி!. விதிகளை மீறிய வாகன ஓட்டிகள்!. ஒரே நாளில் ரூ.6 கோடி அபராதம்!.