Pro Kabaddi 2024: புரோ கபடி லீக் தொடரில் தொடர் வெற்றிகளை ருசித்து வந்த ஹரியானாவை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.
11-வது புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். லீக்கில் ‘டாப்-2’ இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தன. இதனையடுத்து தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இந்த தொடரில் நேற்று (நவ.18) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தொடர் வெற்றிகளை ருசித்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஹரியானா அணியும் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 49-27 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஹரியானாவின் தொடர் வெற்றி தகர்க்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 10 போட்டிகளில் விளையாடியுள்ள தெலுங்கு டைட்டனஸ் 6 வெற்றி, 4 தோல்வி என புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இப்போட்டியில் தோல்வியை தழுவினாலும், ஹரியானா அணி தொடர்ந்து முதலிடத்திலேயே நீடிக்கிறது. 11 போட்டிகளில் விளையாடியுள்ள ஹரியானா, 8 வெற்றி, 3 தோல்வி என்று 41 பாயிண்ட்ஸில் முதலிடத்தில் உள்ளது. இதேபோல், 62வது லீக் ஆட்டத்தில் 37-38 என்ற கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி மும்பா அணி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
Readmore: கேன்சர் கட்டிகளை தாக்கி அழிக்கும் கோவிட்-19 வைரஸ்!. ஆய்வில் ஆச்சரிய தகவல்!