மார்ச் 19ஆம் தேதியான நாளை ஆட்டோக்கள் ஓடாது என அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அதிரடியாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவருமான எஸ்.பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2013ஆம் ஆண்டு 1.8 கிலோ மீட்டருக்கு 25 ரூபாய் என்றும், அடுத்தடுத்த கிமீட்டருக்கு 12 ரூபாயும் என்றும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பிறகு, கட்டணத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தவில்லை.
இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கிமீ கட்டணத்தை உயர்த்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டு, ஆட்டோ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், 1.5 கி.மீட்டருக்கு 50 ரூபாயும், அடுத்தடுத்த கிமீட்டருக்கு 25 ரூபாயும் நிர்ணயிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையே, திமுகவும் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றியமைக்கப்படும் என கூறியிருந்தனர். மேலும், புதிய ஆட்டோக்களுக்கு ரூ.10,000 அரசு மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்தன. ஆனால், இதுவரை அதுதொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. கார்ப்பரேட் போக்குவரத்து நிறுவனங்கள் 1.8 கி.மீட்டருக்கு 76 ரூபாய் வசூலித்து வருகின்றன. அத்தகைய நிறுவனங்கள் மீது தமிழ்நாடு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் பைக் டாக்சியை தடை செய்ய வேண்டுமென்றும், ஆட்டோ செயலியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (மார்ச் 19) காலை 6 மணிக்கு 11 தொழிற்சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இந்த வேலைநிறுத்தத்தில் சென்னையில் சுமார் 1 லட்சம் ஆட்டோக்களில் 60% ஆட்டோக்கள் பங்கேற்க உள்ளன. தொமுச சங்கம் பங்கேற்கவில்லை என்றாலும், தொழிலாளர்கள் பங்கேற்பார்கள்” என்று தெரிவித்தார்.