முருங்கைக்காய் சிப்ஸ், நட்புனா என்ன தெரியுமா, நளனும் நந்தினியும் போன்ற படங்களை தயாரித்த லிப்ரா புரொடக்சன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் மீது அமெரிக்க வாழ் இந்தியர் விஜய் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் பண மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரில், “நான் சென்னை அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்தபோது கிளப் ஹவுஸ் என்ற சமூகவலைதள செயலி மூலமாக தயாரிப்பாளர் ரவீந்தருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் 8ம் தேதி, நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் தரவேண்டும் எனக்கூறி சமூகவலைதள செயலி வழியாக தயாரிப்பாளர் ரவீந்தர் என்னிடம் 20 லட்ச ரூபாய் பணம் கேட்டார். என்னிடம் 15 லட்சம் ரூபாய் மட்டுமே இருப்பதாக கூறினேன். தொடர்ந்து, இரண்டு தவணையாக 10 லட்சம் மற்றும் 5 லட்சம் பணத்தை ரவீந்தரின் நிறுவனமான லிப்ரா ப்ரோடக்ஷன் வங்கி கணக்கிற்கு அனுப்பினேன்.
பணத்தை பெற்றுக்கொண்ட ரவீந்தர், அதை கடந்த ஆண்டு மே 25ஆம் தேதியே திருப்பிக் கொடுத்து விடுவதாக கூறினார். ஆனால், ரவீந்தர் சொன்னபடி பணத்தை திருப்பி தரவில்லை. ரவீந்தரிடம் பணம் கேட்டதற்கு, தொடர்ந்து அலைக்கழித்ததார். ஒருகட்டத்தில் எனது மனைவியும் ரவீந்தரை தொடர்பு கொள்ள முற்பட்டார். அப்போது என் செல்போன் நம்பரை பிளாக் செய்துவிட்டார். இந்நிகழ்வுகளை தொடர்ந்து, ரவீந்திரன் பணம் கேட்டதற்கான ஆதாரம், அவர் பணம் கேட்டு பேசிய ஆடியோ போன்றவற்றை அமெரிக்காவிலிருந்து ஆன்லைன் மூலம் சென்னை காவல் ஆணையருக்கு புகாராக அளித்துள்ளார் விஜய். இந்த புகார் தொடர்பாக தயாரிப்பாளர்கள் ரவீந்தரிடம் கேட்கும் போது, “பணம் தர ஒப்புக்கொண்டு செக் அனுப்புவதாக தெரிவித்துள்ளோம். அதன் பேரில் புகார்தாரர் விஜய் சமாதானமாக செல்ல உள்ளார். மேலும் விஜய் புகாரை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்” என்றார்.