மதுரையில் ரயில்வேக்கு சொந்தமான அரசரடி விளையாட்டு மைதானம் தனியாருக்கு குத்தகை விடப் போவதாக ரயில்வே துறை அறிவித்திருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கு அந்த மைதானத்தில் நடை பயிற்சி செய்பவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பிரபல பட்டிமன்ற பேச்சாளரும் பேராசிரியருமான சாலமன் பாப்பையா தனது வருத்தத்தையும் தெரிவித்து இருக்கிறார்.
மதுரையில் விளையாட்டு வீரர்களிடையே மிகவும் பிரபலமானது அரசரடி விளையாட்டு மைதானம். இந்த மைதானம் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் பல விளையாட்டு வீரர்களை உருவாக்கியது. இங்கு இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை நடைபயிற்சி மற்றும் ஓட்ட பயிற்சியில் ஈடுபடுவார்கள். இந்த மைதானத்தில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்களும் விளையாட்டு விழாக்களை நடத்தும்.
இந்த மைதானத்தை ரயில்வே நிர்வாகம் தனியாருக்கு குத்தகைக்கு விட இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக எம்பி வெங்கடேசனிடம் கேட்டபோது மற்ற இடங்களை குத்தகைக்கு விடுவது போல் அரசரடி மைதானத்தை குத்தகைக்கு விட முடியாது. இது பல விளையாட்டு வீரர்களை உருவாக்கிய மைதானம். இது மதுரையின் மையப்பகுதியில் அமைந்துள்ள மைதானம் மேலும் மதுரையின் ஒரு அடையாளம். இதனை பாதுகாக்க அனைவரும் ஒற்றுமையுடன் முயற்சி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக பேசியிருக்கும் சாலமன் பாப்பையா அவர்கள் தான் சிறு வயது முதலே இந்த மைதானத்திற்கு சென்று நடைபயிற்சி செய்து வருவதாகவும் தற்போது தன்னால் நடை பயிற்சி செய்ய முடியாவிட்டாலும் பலரும் இந்த மைதானத்தை பயன்படுத்தி வருவதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த மைதானத்தை தனியாருக்கு தாரை பார்ப்பது நாட்டை கூறு போட்டு விற்பதற்கு சமம் எனவும் தெரிவித்துள்ளார் . ஒவ்வொரு இடங்களுக்காக தனியாருக்கு கொடுத்துக் கொண்டிருந்தால் நாடு முழுவதுமே தனியார் வசம் சென்று விடும் எனவும் தெரிவித்திருக்கிறார்.