எந்த புகாருக்கும் உள்ளாகாத, குற்றவியல் வழக்குகளில் சிக்காத ஆசிரியர்களை மட்டுமே தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 1000 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த கல்வியாண்டில் பள்ளிகள் தொடங்கி ஒரு மாதம் கடந்த நிலையில், தலைமை ஆசிரியர் இல்லாததால் அரசு பள்ளிகள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன. இதனை நிவர்த்திசெய்யும் வகையில் விரைவில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள் 17 B பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்கள் அல்லது உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்குப் பரிந்துரைக்கக் கூடாது.
தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள் 17 A, பிரிவுகளின் கீழ் தண்டனை பெற்று தண்டனைக் காலம் முடியாத முதுகலை ஆசிரியர்கள் அல்லது உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்குப் பரிந்துரைக்கக் கூடாது. மேற்கூறிய நிபந்தனைகளை மீறி தண்டனை பெற்றவர்களை பரிந்துரைக்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, எந்த புகாருக்கும் உள்ளாகாத, குற்றவியல் வழக்குகளில் சிக்காத ஆசிரியர்களை மட்டுமே தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தகுதிவாய்ந்த முதுகலை ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் கலந்தாய்வு நடத்தி, தலைமையாசிரியர் இல்லாத பள்ளிகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.