அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது மீன்வளத்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருந்து வருபவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர், அதிமுக தலைமையில் கால்நடை மற்றும் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. விசாரணையின்போது 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இதற்கிடையே, அமலாக்கத்துறை வழக்கை எதிர்த்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடுத்த வழக்கின்பேரில் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததால் வழக்கு தொடர்ந்து நடத்தப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இதே புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முறையீடு செய்த வழக்கு நிலுவையில் இருப்பதால், அமலாக்கத்துறையின் இந்த விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, வழக்கை செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தனர்.