கென்யா நாட்டைச் சேர்ந்த பெண் கரோலீன்நகுலா (30). இவரது நண்பரான கென்யாவை சேர்ந்த கனட்டா என்ற வாலிபர், சென்னையில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி சென்னைக்கு அழைத்துள்ளார். இதனால், கடந்த ஜூன் மாதம் கரோலீன் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்துள்ளார். பின்னர் சென்னை அண்ணாநகரில் தனது சக நாட்டு பெண்களுடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு கரோலீன் நீண்ட நேரம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சுற்றி வருவதைப் பார்த்த ரோந்து போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அவர் கீழ்ப்பாக்கத்தில் தங்கியிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் போலீசார் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், கனட்டா என்ற வாலிபர் கென்ய நாட்டு பெண்களிடம் சென்னையில் வேலை வாங்கித் தருவதாக கூறி வரவழைத்து பின்னர் அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், அண்ணாநகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கென்யா பெண்கள் 4 பேரை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். இதனால் அந்த பெண்களுக்கும், கரோலீனிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் அவர் தனது உடமைகளை எடுத்துக் கொண்டு சொந்த நாட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது அவர் கையில் பணம் இல்லாததால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கீழ்ப்பாக்கம் போலீசார் கென்யா பெண் கரோலீன் நகுலாவை வேப்பேரியில் உள்ள தனியார் பெண்கள் விடுதிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கென்யா பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி வரவழைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கென்ய வாலிபர் கனட்டாவை தேடி வருகின்றனர்.