தமிழ்நாட்டில் உள்ளது போல, காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவிலும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சக்தி திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், திட்டத்தால் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை கார்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இதையடுத்து, சக்தி திட்டத்தில் தனியார் பேருந்துகளையும் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்த நிலையில், அவற்றில் சில கோரிக்கைகளை ஏற்க போக்குவரத்துத்துறை மறுத்துவிட்டது. இந்நிலையில், பெங்களூருவில் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இன்று முழு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் வாரத்தின் முதல் வேலை நாளான இன்று, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், பல மக்கள் உரிய நேரத்திற்குள் அலுவலகம் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. அதே நேரத்தில் ஆட்டோ மற்றும் கார்களில் செல்ல கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு கிலோ மீட்டருக்கு 250 ரூபாய் ஆட்டோ ஓட்டுநர்கள் கேட்பதாக கூறும் மக்கள், 3 கிலோ மீட்டருக்கு 800 ரூபாயை வரைக் கேட்பதாகக் கூறப்படுகிறது.