’என்னை வீட்டுக்கு போகச் சொல்லாதீர்கள்… ஏனெனில் எனக்கு வீடு இல்லை’ என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, ”அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படுவது வேதனை அளிக்கிறது. போராட்டங்கள் நடத்துவதால் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை. போராட்டக்காரர்கள் தன்னை வீட்டுக்குப் போகச் சொல்வதை சுட்டிக்காட்டி அவர், வீடு இல்லாத நிலையில் தான் எவ்வாறு வீட்டுக்குப் போக முடியும் என கேள்வி எழுப்பினார். தனது சொந்த வீட்டை போராட்டக்காரர்கள் எரித்துவிட்டதை சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்கே, தான் வீட்டுக்குப் போக வேண்டுமானால் முதலில் போராட்டக்காரர்கள் தனது வீட்டை சீர் செய்து தர வேண்டும் என்றார்.
இலங்கையில் நடைபெறும் போராட்டங்களால் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதாகக் குறிப்பிட்ட ரணில், சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகாத வரை பிற நாடுகள் இலங்கைக்கு நிதியுதவி அளிக்க முன்வராது என்றார். சர்வதேச நாணய நிதியம் நிதி உதவி அளிக்காத நிலையில், நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பிரச்சனைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவை குற்றம் சாட்டுவதால் பயனில்லை என்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்” என்றார்.