உளுந்தூர்பேட்டை அருகில் இருக்கும் மாம்பாக்கம் கிராமத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் இருக்கும் ரெயில்வே கேட்டை மூடி விட்டு அதற்கு பதிலாக சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. இதற்கான வேலைகள் நேற்று தொடங்குவதாக இருந்தது.
இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த கிராமமக்கள் அங்கே திரண்டு வந்து வேலையை தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு கிராம மக்கள் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சுரங்கப்பாதை அமைத்தால் அதன் உள்ளே மழை நீர் தேங்கும் அதனால் போக்குவரத்து பாதிக்கப்படும், இரண்டு ஏக்கர் விவசாய நிலங்களில் அறுவடை செய்த விளை பொருட்களை கனரக வாகனங்களில் சந்தைக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை உண்டாகும். எனவே சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என கிராம மக்கள் கூறினர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான காவல்துறையினர் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த பிரச்சினை குறித்து விரைவில் தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என உறுதி அளித்தார். இதை ஏற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.