விருதுநகர் மாவட்டத்தில் 5ஜி அலைக்கற்றை டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துபொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணன் கோவில் பகுதி 33 வது வார்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனி நபருக்குச் சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைக்க குழி தோண்டப்பட்டு வந்த நிலையில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.
மேலும் குடியிருப்பு பகுதிக்குள் அதிக அலைக்கற்றை 5 ஜி நெட்வொர்க் டவர் அமைக்கப்படுவதால் கர்ப்பிணி பெண்கள் , குழந்தைகள் , குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து செல்போன் டவர் அமைக்காமல் இருக்க அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தம் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பின்னர் குடியிருப்பு வாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.