மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் (புதுமைப்பெண் திட்டம்) அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி அளிக்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் மாணவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்படும். ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும், திருமண உதவிக்காகவும் கடந்த 1989-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் தொடங்கப்பட்டது.
அதன்பின், அதிமுக ஆட்சியில் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். திமுக ஆட்சி அமைந்த பின், மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ப இத்திட்டத்தை மாற்றி அமைக்க முடிவெடுத்தது. அதன்படி, பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்யும் வகையில் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை மிகக்குறைவாக இருப்பதை கருத்தில்கொண்டு, மூவலூர் ராமாமிர்தம் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றி அமைக்கப்படுகிறது. இதன்மூலம், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டம், பட்டயம், தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வந்தது. தற்போது மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் (புதுமைப்பெண் திட்டம்) அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.