ராஞ்சியில் சனாதனவாதிகள், அமைச்சர் உதயநிதியின் உருவ பொம்மையை கழுவேற்றி, செருப்பு மாலை அணிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனாதனம் குறித்து பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்தியா முழுவதும் ஆதரவு பெருகியுள்ள நிலையில், சில இடங்களில் சனாதனவாதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் போராட்டம் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட சனாதன ஆதரவாளர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, உதயநிதியின் படத்தை முகமூடியாக அணிந்த நபர் ஒருவருக்கு கைவிலங்கு போடப்பட்டு, பின்னர் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும், உதயநிதி ஸ்டாலின் உருவபொம்மையை கழுவேற்றுவது போல் குத்தி இழுத்துச் சென்றனர். கழுவேற்றுவது என்பது சனாதனவாதிகளின் தண்டனைகளில் ஒன்று. அதனை பிரதிபலிக்கும் வகையில் உதயநிதி பொம்மைக்கு தண்டனை கொடுத்துள்ளனர்.
இதே போல் சனாதனவாதிகள் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, தனக்கு எதிரான மிரட்டல்களுக்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி, தமிழுக்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த கலைஞரின் பேரன் நான், இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன் என்று கூறியிருந்தார்.