திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தொழிற்பயிற்சி அளிக்க வந்த பெண்ணை போக்சோ கைதி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு தொழிற்பயிற்சி வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. தண்டனை கைதிகளுக்கு வெல்டிங், ஃபிட்டர், டெய்லரிங் உள்ளிட்ட பயிற்சிகள் அவர்கள் விருப்பத்தின் பேரில் வழங்கப்படுகிறது. அதில், ஒரு பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பெண் ஒருவர் பயிற்சி அளித்து வருகிறார். கடந்த 1ஆம் தேதி அவர் வழக்கம்போல் பயிற்சி வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில், போக்சோ வழக்கில் 25 வயது வாலிபர் ஒருவர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்றும், இவர் உள்பட பயிற்சியில் ஈடுபட்டிருந்த கைதிகள் அனைவரும் மதிய உணவுக்காக சென்றனர். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் பயிற்சி வகுப்புக்கு அனைவரும் வரவேண்டும். ஆனால், அந்த வாலிபர் மட்டும், மற்றவர்கள் வருவதற்கு முன்பே வகுப்பறைக்குள் வந்து, அங்கு தனியாக இருந்த பெண் பயிற்சியாளரின் வாயில் துணியை வைத்து அடைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பயிற்சியாளர் அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து அந்த வாலிபரை மிரட்டவே, வாலிபர் பயந்து அருகில் இருந்த கழிவறைக்குள் சென்று மறைந்து கொண்டார். அங்கிருந்து வெளியேறிய பெண் பயிற்சியாளர், நடந்த சம்பவத்தை சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து, கழிவறைக்குள் பதுங்கி இருந்த வாலிபரை பிடித்து தனிமை சிறையில் அடைத்தனர்.
பின்னர் நடந்த சம்பவம் குறித்து பெண் பயிற்சியாளர் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தும் அதை சிறைத்துறை அதிகாரிகள் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அவரை சமரசம் செய்து அவர்கள் அங்கிருந்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.