PVR: அனுமதிக்கப்பட்ட காட்சி நேரத்தை விட 30 நிமிடங்கள் விளம்பரத்தை ஒளிபரப்பியதற்காக PVR-க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து பெங்களூரு நகர்ப்புற மாவட்ட நுகர்வோர் தகராறு தீர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டும் டிசம்பர் டிசம்பர் 26ம் தேதி பெங்களூரை சேர்ந்த அபிஷேக் என்பவர், Vicky Kaushal’s Sam Bahadur-க்காகமாலை 4:05 மணிக்கு மூன்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளார். ஒரு டிக்கெட்டுக்கு ரூ.825.66 செலுத்தியுள்ளார். படம் மாலை 6:30 மணிக்கு முடிவடைய வேண்டும், இதனால் அவர் சரியான நேரத்தில் வேலைக்குத் திரும்ப முடியும். இருப்பினும், மாலை 4 மணிக்கு தியேட்டருக்குள் நுழைந்த போதிலும், மாலை 4:05 மணி முதல் மாலை 4:28 மணி வரை விளம்பரங்களும் திரைப்பட டிரெய்லர்களும் ஒளிபரப்பப்பட்டன. இதனால் தனது திட்டமிடப்பட்ட வேலையை அபிஷேக் தவறவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அபிஷேக், பெங்களூரு நகர்ப்புற மாவட்ட நுகர்வோர் தகராறு தீர்வு ஆணையத்தில் புகார் அளித்தார். அந்த மனுவை விசாரித்த, தலைவர் எம். ஷோபா மற்றும் உறுப்பினர்கள் கே. அனிதா சிவகுமார் மற்றும் சுமா அனில் குமார் தலைமையிலான ஆணையம், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் விளம்பரங்களைக் காண்பிப்பது ‘அநியாயமானது’ மற்றும் ‘நியாயமற்ற வர்த்தக நடைமுறை’ என்றும் கூறியுள்ளது.
திட்டமிடப்பட்ட காட்சி நேரத்தைத் தாண்டி விளம்பரங்களைக் காட்டியதற்காக பிவிஆர் சினிமாஸ், ஓரியன் மால் மற்றும் பிவிஆர் ஐனாக்ஸ் லிமிடெட் ஆகியவற்றுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த ஆணையம், புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமத்திற்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவுகளுக்கு ரூ.8,000 வழங்கவும் உத்தரவிட்டது.பல பார்வையாளர்கள் இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கலாம் என்பதைக் குறிப்பிட்ட ஆணையம், இந்த விஷயத்தில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் உத்தரவுக்கு இணங்குமாறு பிவிஆர் சினிமாஸ் மற்றும் பிவிஆர் ஐனாக்ஸ் லிமிடெட் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியது.
மற்றவர்களின் நேரத்தையும் பணத்தையும் பயன்படுத்தி யாரும் ஆதாயமடைய உரிமை இல்லை என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படங்களைப் பார்ப்பது மனதிற்கு சிறிது ஓய்வு அளிப்பதால், 30 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்து விளம்பரங்களைப் பார்க்க முடியாது, அது எந்த விரக்தியையும் ஏற்படுத்தக்கூடாது என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.