மறைந்த ராணி 2ஆம் எலிசபெத்தின் உயில், சீல் வைக்கப்பட்டு 90 ஆண்டுகளுக்கு லாக்கரில் வைத்து பாதுகாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் ராஜ்ஜியத்தின் அரசியாக கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக இருந்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி தனது 96-வது வயதில் மரணித்தார். இதனையடுத்து, இரண்டாம் எலிசபெத்தின் மகனும் இளவரசருமான சார்லஸ் பிரிட்டனின் மன்னராக பிரகடனப்படுத்தப்பட்டார். இந்நிலையில், பிரிட்டனின் நீண்டகால ராணியான இரண்டாம் எலிசபெத்திற்கு செப்டம்பர் 19ஆம் தேதி இறுதிச் சடங்குகள் அனைத்தும் நடத்தப்படும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இப்படி இருக்கையில், ராணியின் பொருட்கள் பலவும் பொதுவெளியில் மக்களின் பார்வைக்கும், சிலது ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், அரசு குடும்ப நடைமுறைப்படி ராணி 2ஆம் எலிசபெத்தின் உயில் சீல் வைக்கப்பட்டு 90 ஆண்டுகளுக்கு லாக்கரில் வைத்து பாதுகாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், மாட்சிமைப் பொருந்திய அரசு குடும்ப உறுப்பினர்களின் தனியுரிமையானது, பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை 1910ஆம் ஆண்டு முதல் அவர்களது உயில்கள் சீல் வைக்கப்பட்டு லண்டனில் உள்ள ரகசிய லாக்கரில் பாதுகாக்கப்பட்டு வருவது வழக்கம். இதனை லண்டன் உயர்நீதிமன்ற குடும்ப வழக்குப்பிரிவின் தலைமை நீதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த உயில்கள் பாதுகாக்கப்பட்டு வந்தாலும், அதனை பிரித்து படிக்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, 1986ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர மக்களுக்காக ராணி இரண்டாம் எலிசபெத் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் என்ன குறிப்பிட்டிருக்கிறார் என்பது எலிசபெத்தின் பெர்சனல் ஊழியர்களுக்கே தெரியாதாம். இந்த கடிதம் விக்டோரியா கட்டடத்தில் உள்ள விலை மதிப்புடைய பொருட்களை வைக்கும் அறையில் கண்ணாடி பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இது 2085ஆம் ஆண்டு வரை திறந்த பார்க்க எவருக்கும் அனுமதியில்லை. 2085ஆம் ஆண்டு தேர்வு செய்யக் கூடிய சிட்னி நகர மேயர்தான் இதனை திறக்க வேண்டும் என உத்தரவிட்டிருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.