மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நியாய் யாத்திரையை மணிப்பூரில் இருந்து அண்மையில் தொடங்கினார். அவரது யாத்திரை நாகாலாந்து மாநிலத்தைக் கடந்து பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் நுழைந்தது. அசாம் மாநிலத்தின் லக்கிம்பூரில் காங்கிரஸ் கட்சியின் போஸ்டர்கள் மற்றும் பேனர்களை பாஜக தொண்டர்கள் கிழித்ததாகவும், வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
அசாமில் ராகுல் யாத்திரைக்கு ஆளும் பாஜக அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ராகுல் காந்திக்கு அசாம் கல்லூரியில் நேற்று அளிக்கப்பட்டிருந்த அனுமதி திடீரென மறுக்கப்பட்டது. இதனைக் கண்டித்து காங்கிரஸ் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும், அசாம் மாநில போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த சாலைத் தடுப்புகள் சேதமடைந்தன.
இதையடுத்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ராகுல் காந்தி மக்களை இதுபோன்ற வன்முறை செயலுக்குத் தூண்டுவதாக தெரிவித்தார். மேலும், ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு பரிந்துரைத்தார். அதன்படி, ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சிப்ஸாகர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “ராகுல் காந்தியின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழு இதுகுறித்து விசாரணை நடத்தும். லோக்சபா தேர்தலுக்குப் பிறகு ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் ” என்று தெரிவித்துள்ளார்.