ராகுல் காந்திக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட துக்ளக் லேனில் உள்ள பங்களாவை மீண்டும் ஒதுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் மோடி பெயரை முன்வைத்து பேசிய பேச்சுக்காக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், ராகுல் காந்தியின் எம்பி பதவியும் பறிக்கப்பட்டது. அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களா திரும்பப் பெறப்பட்டது. அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட வயநாடு தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, ராகுல் காந்தி தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து குஜராத் அமர்வு மற்றும் குஜராத் உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது. இதன் மூலம் ராகுல்காந்தி மீண்டும் எம்.பி.யாகி இருக்கிறார். அவரது வயநாடு தொகுதி காலியிடம் என்பதும் திரும்ப பெறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நேற்று காங்கிரஸ் கட்சி மக்களவை குழு சபாநாயகரை சந்தித்து ராகுல் காந்தியின் இல்லம் தொடர்பாக பேசினர். இதையடுத்து, அவர் ஏற்கனவே வசித்து வந்த துக்ளக் லேன் இல்லத்தை திரும்பப் பெறுவார் என கூறப்பட்டது. இந்நிலையில், ராகுல் காந்திக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட துக்ளக் லேனில் உள்ள பங்களாவை மீண்டும் ஒதுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுலின் எம்.பி. பதவி நீக்கம் திரும்பப் பெறப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே வசித்த இல்லம் மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.