காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர்தல் பொறுப்பாளர் சவுரவ் கோகாய், மேலிட பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டு ராவ், சிரிவெல்ல பிரசாத், ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் எம்.பி., தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், சென்னை மாவட்ட தலைவர்கள் உள்பட 76 மாவட்ட தலைவர்களும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் மாநில தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்யும் அதிகாரத்தை அகில இந்திய தலைமைக்கு வழங்கியும் தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானம் டெல்லி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, ”யார் கட்சியில் அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்கிறார்களோ அவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்படுவார்கள் என கூறினார். தமிழகத்தில் பாரத் ஜொடோ யாத்ரா வெற்றி பெற்ற காரணம் அந்த அந்த மாவட்ட தலைவர்கள் தான் என்ற அவர், காஷ்மீர் இருந்து கன்னியாகுமரி வரை எந்த சாதாரண மனிதரிடம் கேட்டாலும் ராகுல் தான் தலைவராக இருக்க வேண்டும் என்று கூறுவதாகவும், ராகுலுக்கு நீண்ட நெடிய லட்சிய பாதை உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.