ரத்ததானம் செய்யும், ரயில்வே ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு அளித்து ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
ரயில்வே ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில், மருத்துவமனைகள் செயல்படுகின்றன. தெற்கு ரயில்வேயில், சென்னையில் பெரம்பூர், திருச்சி, மதுரை உட்பட 6 இடங்களில் ரயில்வே மருத்துவமனைகள் உள்ளது.
மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சையின்போது, உடனடியாக, ரத்தம் தேவைப்படுவோருக்கு ரயில்வே ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், ரயில்வே தொழிற்சங்கங்களில் தன்னார்வலர் குழுவினர் ரத்ததானம் கொடுப்பது வழக்கம். சொந்த விடுப்பில் சென்று, அவர்கள் இதுவரை ரத்த தானம் செய்து வந்தனர். எனவே, ரத்ததானம் செய்யும் ரயில்வே ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு அளிக்க பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்தன.
இந்நிலையில், ரத்ததானம் செய்யும், ரயில்வே ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு அளித்து ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த சிறப்பு விடுப்பு ஆண்டுக்கு 4 முறை வழங்கப்படும். ரத்ததானம் செய்ததற்கான உரிய மருத்துவ சான்று பெற்ற பிறகே, ரயில்வே நிர்வாகம் இதை சிறப்பு விடுப்பாக எடுத்துக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.