நொய்டாவில் பாம்பு விஷத்துடன் ரகசிய பார்ட்டிகளை நடத்தி வந்த பிரபல யூடியூபர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 9 பாம்புகளை பறிமுதல் செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பண்ணை வீடுகளில் நடத்தப்படும் ரகசிய பார்ட்டிகளில், பாம்பு விஷம் போதைக்காக பயன்படுத்தப்படுவதாகவும், உயிருள்ள பாம்புகளைக் கொண்டு விஷம் எடுக்கப்படுவதாகவும் பாஜக எம்.பி மேனகா காந்தி நடத்தி வரும் என்ஜிஓ அமைப்பு குற்றம்சாட்டியிருந்தது.
இதையடுத்து, அவர்கள் நடத்திய சோதனையில் நொய்டா அருகில் உள்ள பண்ணை வீட்டில் இருந்த 9 பாம்புகளை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அங்கிருந்த 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இந்த நிகழ்ச்சிகளை நடத்துவது பிரபல யூடியூபரான எல்விஷ் யாதவ் என்பது தெரியவந்தது. இவரை தொடர்பு கொண்டு பாம்பு விஷ பார்ட்டி குறித்து கேட்ட போது, அவரது ஏஜென்ட்கள் எனக்கூறி அளிக்கப்பட்ட எண்ணைத் தொடர்பு கொண்டே இந்த முறைகேடு வெளியில் வந்ததாக என்ஜிஓவினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து எல்விஷ் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டதால் பிரபலமான எல்விஷ், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்று மேலும் பிரபலமடைந்தார். தற்போது, பாம்பு விஷத்துடன் பார்ட்டி நடத்துவதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.