தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட்டின் உச்ச நடிகர் சல்மான் கான் ஆகியோர் முதன்முறையாக ஒரு புதிய படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜவான் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ பான் இந்தியா இயக்குனராக மாறி உள்ளார்.
அட்லீ இயக்க உள்ள அடுத்த படத்தில் ரஜினி, சல்மான் கான் இருவரும் முன்னணி வேடங்களில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்..
முன்னதாக, பிரபல ஆங்கில இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் அட்லீ தனது அடுத்த இயக்கத்தில் சல்மான் கான் முன்னணி வேடத்தில் நடிப்பார் என்பதை உறுதிப்படுத்தினார். இதை தொடர்ந்து இந்த படம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அதன்படி இந்த படம் டபுள் ஹீரோ இருக்கும் என்று கூறியிருந்த நிலையில், இப்போது ரஜினிகாந்த் இணை நாயகனாக நடிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் அட்லீ இயக்கும் படத்தில் சல்மான் கான் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதுவரை, தயாரிப்பாளர்களால் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்த சூழலில் அட்லீ இயக்கும் புதிய படத்தில் ரஜினியும் சல்மான் கானும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், அட்லீ சமீபத்தில் வருண் தவான் முன்னணி வேடத்தில் நடிக்கும் பேபி ஜான் படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார். 2016 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இந்த படம் உருவானது. கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் மூலம் தான் பாலிவுட்டில் அறிமுகமானார். வாமிகா கப்பி, ஜாரா ஜியானா, ஜாக்கி ஷெராஃப் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். சுவாரஸ்யமாக, சல்மான் கான் பேபி ஜான் படத்தில் கேமியோ ரோலில் நடித்தார்.
சல்மான் கான் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய சிக்கந்தர் படத்தில் பணியாற்றி வருகிறார். ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் இந்தப் படத்தில் சத்யராஜ், ஷர்மன் ஜோஷி மற்றும் பிரதிக் பப்பர் ஆகியோரும் துணை வேடங்களில் நடித்துள்ளனர். .இந்த படம் வரும் மார்ச் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மறுபுறம், கடைசியாக வேட்டையன் படத்தில் நடித்த ரஜினிகாந்த், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் அமீர் கான் கேமியோ ரோலில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நெல்சன் இயக்க உள்ள ஜெயிலர் 2 படத்தையும் ரஜினி கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்கும் சூர்யா.. இயக்குனர் யார் தெரியுமா..?