1975-ல் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினிகாந்த், 50 ஆண்டுகளாக இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருகிறார். தனது துள்ளலான ஸ்டைல், அசத்தலான நடிப்பின் மூலம் தலைமுறைகளை கடந்து பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மேலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பாக்ஸ் ஆபீஸ் கிங்காகவும் வலம் வருகிறார்.
ஆனால் ரஜினியை பற்றி பலருக்கும் தெரியாத தகவல் ஒன்று உள்ளது. ஆம். வெவ்வேறு வடிவங்களில் வெளியான படங்களில் நடித்த முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை ரஜினி பெற்றுள்ளார் என்பது பலருக்கும் தெரியாது.
டிசம்பர் 12 ஆம் தேதி 74 வயதை எட்ட இருக்கும் ரஜினிகாந்த், தனது திரை வாழ்க்கையில் 4 வெவ்வேறு வடிவங்களில் திரைப்படங்களில் நடித்த முதல் இந்திய நடிகர் ஆவார். கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட அபூர்வ ராகங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் ரஜினிகாந்த்.
கே பாலச்சந்தர் இயக்கிய இந்த படத்தில் ரஜினி நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். ஆனால் முதல் படத்திலேயே விமர்சகர்களின் பாராட்டை பெற்றார்.
1977-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே படம் தான் தமிழ் சினிமாவில் ரஜினியின் முதல் கலர் படமாகும். இந்த படத்திலும் ரஜினி நெகட்டிவ் ரோலில் தான் நடித்திருப்பார்.
தொடர்ந்து நெகட்டிவ் ரோலில் நடித்து வந்த ரஜினி, பைரவி படத்தின் மூலம் முதன்முதலில் ஹீரோவாக நடித்தார். இந்த படத்திற்கு பின்னரே அவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பெயரும் கிடைத்தது.
பில்லா, முரட்டுக்காளை, தில்லு முல்லு, அண்ணாமலை பாட்ஷா, முத்து, படையப்பா போன்ற பல பிளாக்பஸ்டர் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கினார் ரஜினிகாந்த்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்திய ரஜினிகாந்த், 2014-ம் ஆண்டு கோச்சடையான் படத்தின் மூலம் தனது வாழ்க்கையில் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்தார். சௌந்தர்யா ரஜினிகாந்தின் இந்த பிரம்மாண்டமான படம் அனிமேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படமாக்கப்பட்டது.
மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் திரைக்கு வந்த இந்த படம், ஆனால் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை அடைந்தது. 2018-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படம் ரஜினிகாந்தின் மற்றொரு மைல்கல் ரிலீஸ் ஆகும். எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான இப்படம் 3டியில் எடுக்கப்பட்டது.
இதன் மூலம் கருப்பு – வெள்ளை, கலர், 3D, மோஷன் கேப்சர்/அனிமேஷன் ஆகிய 4 வெவ்வேறு வடிவங்களில் வெளியான படங்களில் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை ரஜினிகாந்த் பெற்றுள்ளார். இந்த தகவலை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தனது 73 வயதிலும் படங்களில் நடித்து வரும் பிசியான நடிகர்களில் ஒருவராகவும் இருக்கிறார். கடைசியாக அவர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர் மற்றும் ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். மேலும் ஜெயிலர் 2 படத்திலும் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : ”இனி படம் பார்த்துவிட்டு வருவோரிடம் விமர்சனம் கேட்கக் கூடாது”..? சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!