மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
சமீபத்தில் பெய்த மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பை சந்தித்தன. அதில், சென்னை முழுவதும் நீரால் சூழ்ந்தது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அறக்கட்டளை மூலமாக 20-க்கும் மேற்பட்ட நிவாரண பொருட்களை 4 மாவட்டங்களுக்கு 15 வண்டிகளுக்கு மேல் அனுப்பி வைத்தார்.
அதில் அரிசி, ரவை, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருட்களும், பாய், பெட்ஷீட் உள்ளிட்டவையும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிவாரணப் பொருட்கள் அனைத்தும் அந்தந்த மாவட்டத்தின் ரசிகர்கள் மன்ற மூலமாக வழங்கப்படுகின்றன.
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து இந்த நிவாரணப் பொருட்கள் லாரி, டெம்போக்கள் மற்றும் மினி வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 73-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இந்நிலையில், பொதுமக்களுக்கு உதவும் வகையில் இந்த நிவாரணப் பணிகளை செய்து வருகிறார்.