சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து, தடையை மீறி பேரணி செல்ல முயன்றதால் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார்..
நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று பேரணியில் ஈடுபட்டனர்.. காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டனர்..
தடையை மீறி பேரணி செல்ல கூடாது என்று டெல்லி காவல்துறையினர் அறிவுறுத்தினர்.. ஆனால் பேரணி தொடர்ந்து நடைபெற்றதால் காங்கிரஸ் எம்.பிக்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.. பேரணியை நிறுத்த வேண்டும் என்று ராகுல்காந்தியிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.. ஆனால் குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணி செல்வதில் ராகுல் காந்தி உறுதியாக இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார்..
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அங்கு பேரணி, போராட்டங்கள் நடைபெற கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.. இந்த சூழலில் தடையை மீறி பேரணி செல்ல முயன்றதால் ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது..