அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில், ராமருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் வரும் 22ஆம் தேதி குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
ராமர் சிலை பிரதிஷ்டை, பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கோயில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழா தொடர்பான தவறான தகவல்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை பற்றி தவறான தகவல்களை வெளியிட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.