ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா உத்திரபிரதேசம் மாநில அயோத்தி நகரில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்கு நாடெங்கிலும் இருந்து ஏராளமான சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். அரசியல்வாதிகள் சினிமா துறை பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தவிர ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பாபர் மசூதி இடிப்பின் போது கர சேவையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் ராமர் கோவில் நிலம் மீட்பு தொடர்பான வழக்கில் வாதாடிய வக்கீல்கள் ஆகியோருக்கும் சிறப்பு அழைப்பாளர்களுக்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.
ராமர் கோவில் கும்பாபிஷேகம் நிகழ்வு இன்னும் ஒரு வாரத்தில் துவங்க உள்ள நிலையில் அதற்கான சிறப்பு பூஜைகள் மற்றும் சடங்குகள் நேற்று முதல் ஆரம்பமாகி இருக்கிறது. அதன்படி உத்தரப் பிரதேசத்தில் உள்ள பக்தர்கள் நேற்று (ஜனவரி 16 ஆம் தேதி) சரயு நதிக்கரையில் சடங்குகளைத் தொடங்கினர். ராமர் கோவில் கும்பாபிஷேக செயல்முறையின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் புனித ஆரத்தி காட்டி வழிபட்டனர். பக்தியின் அடையாளமாக, மக்கள் இந்த மங்களகரமான நிகழ்வைத் தொடங்குவதற்காக விளக்கின் ஒளியால் சரயு நதியை ஒளிரச் செய்தனர்.
இந்த ராமர் கோவில் முற்றிலும் நாட்டின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் 3 அடுக்குகளைக் கொண்ட கோவிலாகும். ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது. ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் ‘கருடா’ போன்ற சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்ட கோயில் வளாகம், 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டது.