தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் கே.என்.நேரு. இவரது சகோதரர் ராமஜெயம். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். எனவே, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ராமஜெயத்தை ரவுடிகள் கடத்திச் சென்று படுகொலை செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து திருச்சி போலீசார் தமிழகம் மட்டுமின்றி, வட மாநிலங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தினர். இருப்பினும், ராமஜெயத்தை கொன்ற குற்றவாளிகள் பற்றி தகவல் எதுவும் தெரியவில்லை. இந்நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகினர். எனவே, அந்த கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதிலும், குற்றவாளிகள் தொடர்பாக துப்பு எதுவும் கிடைக்கவில்லை.
திருச்சி ராமஜெயம் கொலை நடந்து 10 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் பிடிபடாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக துப்பு கொடுத்தால், ரூ 50 லட்சம் வெகுமதி தரப்படும் என்று காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் மாருதி வெர்சா கார் பயன்படுத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.. இதனையடுத்து திருச்சியில் உள்ள 1,649 வெர்சா கார் உரிமையாளர்களிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.. இந்த விசாரணை இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..