தலைநகர் சென்னையில் பைக் டாக்சியில் பயணித்த பெண் ஒருவரிடம் டிரைவர் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெரும்பாலான நேரங்களில் பைக் டாக்சி பயணங்களின்போது, பெண்கள் எந்தவொரு பிரச்சினைகளையும் எதிர்கொள்வதில்லை. இருப்பினும் சில நேரங்களில் பைக் டாக்சி டிரைவர்கள் பயணிக்கும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் சம்பவங்களும் நடக்கிறது. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது சென்னையில் நடந்துள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் வசிக்கும் 22 வயது பெண் ஒருவர் தனது மொபைல் மூலம் ரேபிடோ பைக் டாக்சியை புக் செய்துள்ளார். கிண்டியில் இருந்த அந்த பெண் கொட்டிவாக்கம் வரை செல்ல பைக் டாக்ஸியை புக் செய்துள்ளார். கொட்டிவாக்கம் செல்லும் வரை எந்தவொரு பிரச்சினையும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண்ணை இறக்கிவிட்ட பிறகு ஓட்டுநரின் செயல்பாடுகள் மாறியுள்ளது.
பைக்கில் இருந்து இறக்கிவிட்ட பிறகு அந்த நபர் பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த பெண் உடனடியாக அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இருப்பினும், அவரை விடாமல் பின்தொடர்ந்த அந்த ஓட்டுநர், பெண்ணுக்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதை யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டுக் கிளம்பி இருக்கிறார்.
துணிச்சலாக அந்த பெண் இந்தச் சம்பவம் குறித்து நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். போலீஸ் விசாரணையில் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டது நடனசபாபதி என்பதும் அவர் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து உடனடியாக போலீசார் அந்த நபரைக் கைது செய்தனர். மேலும், மொபைல் மற்றும் அவரது டூவீலர் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த 6 மாதமாக நடனசபாபதி ரேபிடோ பைக் டாக்சி ஓட்டி வந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.