தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் மலிவு விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் கோடிக்கணக்கான பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். அதேபோல, ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் போன்றவைகள் குறித்து, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில், பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு மாதமும் மாநிலம் முழுவதிலும், ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்துக்கான குறைதீர்ப்பு முகாம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. அதன்படி, செப்டம்பர் மாதத்திற்கான முகாம் சென்னை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வரும் 14ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், ரேஷன் பொருள் பெற நேரில் வருகை தர முடியாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.