தமிழ்நாட்டில் ரேஷன் கடை ஊழியர்கள் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மானிய விலையில் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால், ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் தான், ரேஷன் கடை ஊழியர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு அரசின் நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் தலைவர் ஜெயச்சந்திர ராஜா கூறுகையில், “ரேஷன் உணவுப் பொருட்கள் அனைத்தும், சரியான எடையில் பாக்கெட்டில் வழங்கப்பட வேண்டும். ரேஷன் கடைகளில் விற்பனை முனைய கருவியின் இணையதள சேவையை மேம்படுத்த வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும்.
அதேபோல், ரேஷன் கடை ஊழியர்களுக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (08.04.2025) ஒருநாள் ரேஷன் ஊழியர்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மாவட்ட தலைநகரங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவர்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.