மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக வரும் 17ஆம் தேதி சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் 4 மாவட்டங்களில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.6,000 நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்தது.
இதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதற்கு ஏதுவாக வரும் 17ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் உள்ள மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களிலும் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது. இதேபோல் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் எந்தெந்த இடங்களில் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது என்பது தொடர்பான அரசாணை கடந்த 13ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.