‘லியோ’ வெற்றி விழாவில் இயக்குநர் ரத்னகுமார் நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாகத் தாக்கிப் பேசியது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையான நிலையில், அவர் அதிரடியான முடிவை எடுத்திருக்கிறார்.
லோகேஷ் இயக்கத்தில் விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே நடிகர் ரஜினியின் குட்டி கதைக்கு நடிகர் விஜய் மேடையில் பதிலடி கொடுத்தார். ‘அப்பாவின் நாற்காலிக்கு மகன் ஆசைப்படுவதில் என்ன தப்பு இருக்கு? பெரிதாக ஆசைப்படுங்கள்’ என்று சொன்னவர், இறுதியாக ‘ஒரு புரட்சித்தலைவர்தான், ஒரு உலக நாயகன்தான், ஒரு சூப்பர் ஸ்டார்தான், ஒரு தலதான்’ என இந்த ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால், அதற்கு முன்பு பேசிய இயக்குநரும் ‘லியோ’ படத்தின் எழுத்தாளருமான ரத்னகுமார் சொன்ன விஷயம்தான் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு சினிமா ஆசை வரக் காரணமே விஜய்தான் எனக் கூறியவர் பின்பு, ‘விஜய் எல்லோரையும் சமமாக தான் நடத்துவார். எல்லாவற்றையும் தாண்டி எவ்வளவு உயர பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆக வேண்டும்’ எனப் பேசினார்.
இது ரஜினியின் ‘காக்கா-கழுகு’ குட்டிக்கதையோடு ஒப்பிட்டு ’கழுகு எவ்வளவு உயர பறந்தாலும் பசித்தால் கீழே வர வேண்டும்’ என்ற அர்த்தத்தில் அவர் ரஜினியை சொல்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால், தான் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக ரத்னகுமார் முடிவெடுத்திருக்கிறார். அடுத்தப் படங்களின் பணிகள்தான் இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டிருந்தாலும் ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவில் இவர் பேசியது சர்ச்சையானதால்தான் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.