RCB vs RR: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 42-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. பெங்களூரு அணியின் சார்பில் முதலாவதாக விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்த ஜோடியில், சால்ட் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்து அதிரடியாக ரன்கள் சேர்த்த விராட் கோலி, தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் 70 (42) ரன்களில் கேட்ச் ஆனார். இதன் மூலம் விராட் கோலி மேலும் ஒரு சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார். முதல் பேட்டிங்கின்போது, அவர் ஒட்டுமொத்தமாக 62 அரை சதங்கள் அடித்து உலகளவில் அவர் புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் கோலிக்கு அடுத்தப்படியாக பாபர் அசாம் உள்ளார்(61), கிறிஸ் கெய்ல்(57), டேவிட் வார்னர் (55) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
மறுமுனையில் அதிரடி காட்டி வந்த படிக்கல், 26 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 50 (27) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து படிதார் 1 ரன்னில் கேட்ச் ஆனார். முடிவில் ஜிதேஷ் சர்மா 20 (10) ரன்களும், டேவிட் 23 (15) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ஹசரங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது .
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 19 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஹஸில்வுட் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். வைபவ் சூர்யவன்சி 16 ரன்னில் அவுட் ஆகினார்.
கேப்டன் ரியான் பராக் 22 ரன்னில் அவுட் ஆகினார். நிதிஷ் ராணா 28 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். ஹெடமையர் 11 ரன்னில் அவுட் ஆகினார். துருவ் ஜூரல் 34 பந்தில் 47 ரன்கள் அடித்து 19வது ஓவரில் அவுட் ஆகினார். ஷுபம் துபே 12 ரன்களில் வெளியேற அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இறுதியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 194 ரன்கள் மட்டுமே எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வி கண்டது.
வெளி மைதானங்களில் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்ற பெங்களூரு அணிக்கு, சொந்த மைதானத்தில் வெற்றி கிடைக்காமல் இருந்தது. அந்த குறையை தற்போது தீர்த்து வைத்துள்ளது பெங்களூரு அணி. சொந்த மண்ணில் முதல் 3 ஆட்டங்களில் தோல்வியை தழுவிய பெங்களூரு அணி, நேற்றைய போட்டியில் வெற்றிவாகை சூடியது. ஒட்டுமொத்தமாக 9 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி, 6 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது.